Stellar Journey

நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3

Posted by:

|

On:

|

, ,

கடந்த தொடரில் Ecliptic என்றால் என்னவென்பது குறித்தும் லீப் வருடம் குறித்தும் Transit நிகழ்வு குறித்தும் முக்கியமாகப் பார்த்தோம். அதற்கான இணைப்பு –

நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 2

சூரியனைப் பூமி 23.4 பாகை கோணத்தில் சாய்ந்த நிலையில் தான் சுற்றி வருகின்றது. அதாவது பூமியின் வட தென் துருவ அச்சானது Ecliptic இற்கு செங்குத்தாக அமைந்திருக்கவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் பூமியின் கிடை அச்சான Equatorial Plane, Ecliptic உடன் இணைந்து காணப் படவில்லை. Axial Tilt எனப்படும் இந்நிகழ்வு காரணமாக ஒரு வருடத்தில் சுழற்சி முறையில் பூமியில் பருவ நிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

Axial Tilt சூரியனை எதிர்நோக்கும் விதத்தின் காரணமாக ஒரே நேரத்தில் பூமியின் வடக்கே உள்ள நாடுகள் ஒரு பருவ காலத்தையும், தெற்கே உள்ள நாடுகள் இன்னொரு பருவ காலத்தையும், பூமத்திய ரேகையில் (Equator) உள்ள நாடுகள் எப்போதும் ஒரே அதிகளவு வெப்பம் நிலவும் நாடுகளாகவும் விளங்குகின்றன. உதாரணத்துக்கு டிசம்பரில் பிரிட்டனில் குளிர் காலம் நிலவும் அதே நேரத்தில் தென் துருவத்துக்கு அண்மையில் உள்ள நாடான அவுஸ்திரேலியாவில் கோடை காலத்தையும் மக்கள் எதிர்நோக்குவர்.

6 மாதம் கழித்து இதற்கு நேர் எதிராக ஜூனில் பிரிட்டனில் கோடை காலமும், அவுஸ்திரேலியாவில் குளிர் காலமும் நிலவுகின்றது. கீழே உள்ள படத்தில் இதனைத் தெளிவாக இனம் காண முடியும்.

இதேவேளை ஒவ்வொரு வருடமும் ஒரு நாளில் சூரியன் பிரகாசிக்கும் நேரமும் வேறுபடுகின்றது.

இதனை இலண்டன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் ஒப்பிட்டு கீழே உள்ள படம் விளக்குகின்றது.

பொதுவாக இலண்டனில் கோடை காலத்தின் போது (ஜூன் 20-22) பகல் பொழுதில் சூரியன் அதன்  நண்பகலில் வானில் உச்சத்தைத் தொட்டிருக்கும்.

இது பின்பு படிப்படியாக மார்ச் 20-21 மற்றும் செப்டெம்பர் 22-23 ஆகிய தினங்களில் சற்றுக் கீழேயும், குளிர் காலத்தின் போது டிசம்பர் 21-22 இன்னும் கீழேயும் சூரியனின் பாதை அமையும். இதனால் படிப்படியாக பகல் பொழுதின் நீளம் குறைவதையும் அவதானிக்கலாம். இது பூமியின் முழு வட அரைக் கோளத்துக்கும் பொருந்தும்.

நேர் எதிராக பூமியின் தென்னரைக் கோளத்தில் சூரியன் கிழக்கில் இருந்து மேற்கே பயணிக்கின்றது. காந்தப் புலத்தின் திசை மாறியிருப்பதை அவதானிக்க. சிட்னியில் டிசம்பர் 21-22 காலப் பகுதியில் சூரியன் உச்சி வானத்தையும், மார்ச் 20-21 மற்றும் செப்டெம்பர் 22-23 ஆகிய தினங்களில் சற்றுக் கீழேயும், ஜூன் 20-22 தினங்களில் இன்னும் கீழேயும் சூரியன் பயணிக்கும். இதுவே பகல் பொழுதின் நீளம் வேறுபடும் திசையுமாகும்.

இதேவேளை இரவுப் பொழுதின் நீளத்தை எடுத்துக் கொண்டால் அது இந்த அனைத்துத் தரவுகளுக்கும் ஏற்ப நேர் எதிராக குறைந்து செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி SIDEREAL DAY மற்றும் SOLAR DAY என்றால் என்னவென்று பார்ப்போம். தனது அச்சில் சுழலும் பூமி ஒரு முறை தன்னை சுற்றிக் கொள்ள 23 மணித்தியாலங்கள் 56 நிமிடங்கள் 4 செக்கன்கள் எடுத்துக் கொள்ளும். இதுவே பூமியின் உண்மையான சுழற்சி அளவாகும். இது SIDEREAL DAY என்றும் அழைக்கப் படுகின்றது. நாம் சூரியனையும், நிலவையும் வேறு ஏதேனும் விண்வெளி கூறுகளையும் பார்க்கும் போது பூமியின் சுழற்சி அதில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் காண்கின்றோம்.

இதனால் பூமியின் வடவரைக் கோளத்தையும், தென்னரைக் கோளத்தையும் ஒரு முறை சுற்றி வர நட்சத்திரங்கள், மற்றும் அதன் தொகுதிகளுக்கும் ஒரு SIDEREAL DAY எடுத்துக் கொள்கின்றது. அதாவது உதித்து மறைந்து பிறகு மீண்டும் உதிப்பதற்கு..

இதில் விதி விலக்காக பூமியின் அச்சுக்கு நேராக வடவரைக் கோளத்திற்கு மேலே அமைந்திருக்கும் போலாரிஸ் என்ற நட்சத்திரம் எப்போதும் அதே இடத்தில் இருக்கும். அதாவது உதித்து மறைவதில்லை.

எனினும் நாம் 24 மணித்தியாலங்கள் கொண்ட SOLAR DAY இனைப் பயன்படுத்துகின்றோம். கிட்டத்தட்ட SIDEREAL DAY உடன் 4 நிமிடங்கள் அதிக வித்தியாசம் கொண்ட இந்த SOLAR DAY பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் ஏற்படுகின்றது. நடைமுறையில் புழக்கத்தில் இருக்கும் SOLAR DAY உம் திருத்தமானதே ஆகும். எவ்வாறு என்று பார்ப்போம். கீழே விளக்கப் படம் உள்ளது..

சூரியனை பூமி நீள்வட்ட ஒழுக்கில் சுற்றி வருகின்றது. எனினும் நாம் விளங்கிக் கொள்வதற்காக ஒரு வட்டத்துக்கு 360 பாகைகள் உள்ளன என எடுத்துக் கொள்வோம். ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. எனவே பூமி சூரியனை ஓவ்வொரு நாளும் 1 பாகை சராசரியாக சுற்றி வருகின்றது. மேலும் பூமி தொடர்ச்சியாக சூரியனைச் சார்ந்து சுற்றி வந்த வண்ணமே உள்ளது. எனவே எமது பார்வையில் சூரியன் மெதுவாக 1 பாகை பூமியை மேற்கில் இருந்து கிழக்காக நகர்த்துவது போல் தோன்றினாலும் இது தினசரி சுழற்சிக்கு எதிர்த் திசையிலேயே இருக்கின்றது.

எனவே இந்த 1 பாகை சுற்றுகை காரணமாக சூரியன் ஒரு சாதாரண நடுப்பகலில் வானில் அதன் உச்ச நிலையை அடைய நாம் 4 நிமிடங்கள் அதிகமாகக் காத்திருக்க வேண்டி ஏற்படுகின்றது. இதுவே SOLAR DAY எனப்படுகின்றது. இனி Equinoxes என அழைக்கப் படும் சம இரவு பகல்கள் குறித்துப் பார்ப்போம். தனது சுற்றுப் பாதையில் சூரியனிடம் இருந்து மிக விலகி பூமியின் சாய்மானம் (Tilt) அமையும் போது 21 ஆம் திகதி ஜூன் மற்றும் 21 டிசம்பரில் அண்மித்து வரக்கூடிய திகதிகளில் கோடை காலம் மற்றும் குளிர் காலத்தின் நடுப்பகுதி அமையும். இத்திகதிகளுக்கு இடையில் வரக்கூடிய காலம் அதாவது மார்ச் 20 மற்றும் செப்டெம்பர் 23 ஆகிய திகதிகளில் இரு Equinoxes உம் அமையும்.

இதற்கான விளக்கப் படம் கீழே

இக்காலப் பகுதியில் பூமியின் சாய்மானம் அதன் சுற்று வட்டப் பாதையில் சமநிலைத் தூரத்தில்

வருவதால் வடவரைக் கோளத்திலும், தென்னரைக் கோளத்திலும் இரவு பகல் சமமாக இருக்கும். அதாவது இரவு 12 மணித்தியாலங்களும், பகல் 12 மணித்தியாலங்களும் காணப்படும். அடுத்த தொடரில் பூமத்திய ரேகைகள் மற்றும் தீர்க்க ரேகைகள் குறித்தும் விண்வெளி கோளம், மற்றும் விண்வெளித் துருவங்கள் குறித்தும் பார்ப்போம்.

தகவல் – Stargazing (Collins)