43 மில்லியன் வருடங்களுக்கு முன் வட கடலில் வீழ்ந்த பாரிய விண்கல்

வடக்கு கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள சில்வர்பிட் பள்ளத்தாக்கு (Crater) எவ்வாறு தோன்றியிருக்கலாம் என கடந்த ஒரு தசாப்தமாக விஞ்ஞானிகள் மத்தியில் நிலவி வந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

43 தொடக்கம் 46 மில்லியன் வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் வீழ்ந்த விண்கல் அல்லது வால்வெள்ளி காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு புதிய சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன. டாக்டர் உயிஸ்டீன் நிக்கல்சன் என்ற எடின்பர்க் பல்கலைக் கழக விஞ்ஞானி தலைமையில் மேற்கொள்ளப் பட்ட பூகோள ஆய்வு முறைகளான Seismic imaging மற்றும் Microscopic analaysis போன்ற வழிமுறைகளைக் கையாண்டு பாறை மாதிரிகளை அறுத்து செய்யப் பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சில்வர்பிட் ஆனது பூமியின் அரிதான விண்கல் மோதுகை பள்ளத்தாக்கு என்பதற்கு வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது.

வடக்கு கடலின் அருகே கடல் மட்டத்தில் இருந்து 700 மீட்டர் கீழே அமைந்துள்ள சில்வர்பிட் பள்ளத்தாக்கு Yorkshire கடற்கரையில் இருந்து 80 மைல் தொலைவில் அமைந்துள்ளது. 2002 ஆமாண்டு இது கண்டுபிடிக்கப் பட்ட போது 3 கிலோமீட்டர் விட்டமுடைய இந்த பாரிய பள்ளத்தாக்கு 20 கிலோ மீட்டர்கள் அகலமுள்ள வட்ட அடுக்கினால் சூழப்பட்டிருந்தது புவியியலாளர்களிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த பள்ளத்துக்கு கீழே உப்பு ஆழமாக நகர்வதால் அல்லது எரிமலை செயற்பாடு காரணமாக கடற்பரப்பு சரிந்ததால் இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என மாற்றுக் கோட்பாடுகள் நிலவிய நிலையில் 2009 ஆமாண்டு இது தொடர்பில் ஜியோசயின்டிஸ்ட் இதழில் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் விண்கல் மோதுகைக்கு எதிராக வாக்களித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது கிடைத்த புதிய சான்றுகள் இவற்றைத் தவறு என நிரூபித்துள்ளன. மேலும் 160 மீட்டர் விட்டமுள்ள விண்கல் ஒன்று மேற்கே இருந்து  கீழ் கோணத்தில் குறித்த கடல் படுக்கையைத் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. 

விண்கல் தாக்கி சில நிமிடங்களுக்குள் 1.5 கிலோமீட்டர் உயரத்துக்கு கற்களை வீசி எறிந்ததுடன் இவை கடலில் விழுந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் உயரமான சுனாமி அலைகளையும் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

விண்கற்களின் தாக்கம் ஒரு கிரகத்தில் ஏற்படுத்தும் மாறுதலை வேறு கிரகங்களில் செய்ய கடினமான சூழல் நிலவும் வேளையில் இந்த சில்வர்பிட் பள்ளத்தாக்கு முக்கியத்துவம் பெறுகின்றது. இங்கு பெறப்படும் மாதிரிகள் மிகவும் உபயோகமானவை ஆகும்.

டாக்டர் நிக்கல்சன் கூறும் போது “சில்வர்பிட் ஒரு அரிய மற்றும் விதிவிலக்காகப் பாதுகாக்கப்பட்ட ஹைப்பர்வெலோசிட்டி தாக்கப் பள்ளம். பூமி மிகவும் மாறும் கிரகம் என்பதால் இவை அரிதானவை – தட்டு டெக்டோனிக்ஸ் மற்றும் அரிப்பு இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றின் அனைத்து தடயங்களையும் அழிக்கின்றன.

“நிலத்தில் சுமார் 200 உறுதிப்படுத்தப்பட்ட தாக்கப் பள்ளங்கள் உள்ளன, மேலும் கடலுக்கு அடியில் சுமார் 33 மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.

“இந்தக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, வரலாறு முழுவதும் சிறுகோள் தாக்கங்கள் நமது கிரகத்தை எவ்வாறு வடிவமைத்தன என்பதைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் சிறுகோள் மோதல் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதைக் கணிக்கவும் முடியும்.” என்றார்.

65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியில் கோலோச்சி இருந்த டைனோசர் இனங்கள் பூமியுடன் மோதிய ஒரு மிகப் பெரும் விண்கல்லால் பூண்டோடு அழிந்ததாக இன்று கருதப் படும் நிலையில் இதற்கு சான்றாக மெக்ஸிக்கோவில் உள்ள சிக்சுலப் பள்ளம் கூறப்படுவதுடன் மேற்கு ஆப்பிரிக்காவின் நாதிர் பள்ளம் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்ட விண்கல் மோதுகை பள்ளத்தாக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.