100 வருட தேடுதலுக்குப் பிறகு கரும்பொருளின் இருப்பு கண்டுபிடிப்பு?

பிரபஞ்சவியலில் (Cosmology) அண்டங்களில் (Galaxies) தென்படும் அசாதாரணமான இயக்கங்களுக்குக் காரணம் என்று கருதப் படும் கரும் பொருள் (Dark Matter) என்ற பதம் மும்மொழியப் பட்டு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியுள்ள நிலையில் அதன் இருப்புக்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாசாவின் Fermi காமா கதிர் விண் தொலைக் காட்டி சமீபத்தில் அடையாளம் கண்ட அதிசக்தி காமா கதிர்களை அடிப்படையாகக் கொண்டு டோக்கியோ பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.. கரும்பொருள் துணிக்கைகள் மோதும் போதும் ஒன்றை இன்னொன்று நிவர்த்தி செய்யும் போதும் மாத்திரமே இந்தளவு அதிசக்தி வாய்ந்த காமா கதிர்கள் (High energy Gamma rays) வெளிப்படுவதாகக் கூறப்படுகின்றது. சக்தி மட்டங்கள், மற்றும் தீவிரமான அடுக்குகள் (intensity patterns), மற்றும் பிரகாசமான வெளிச்சத்துடன் சுருங்கிக் காணப்படும் நீடித்திருக்கக் கூடிய பலவீனமான இணைவுத் திணிவு துணிக்கைகள் (Weakly interacting massive particles) ஆகியவை பிரபஞ்ச்த்தின் கண்ணுக்குத் தெரியாத மறைந்திருக்கும் திணிவாகக் கருதப் படும் கரும்பொருளை இனம் காண்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட அதிசக்தி காமா கதிர் சிக்னல்கள் கரும் பொருள் துணிக்கைகளின் தடங்களாகும் என்றும் இந்தக் கண்டுபிடிப்பு மிக நீண்ட காலம் மர்மமாக நீடித்த கரும்பொருளின் இருப்பை மனித இனம் அறிந்து கொண்ட முதலாவது தருணம் என்றும் ScienceDaily.com இணையத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 1930 களின் தொடக்கத்தில் சுவிஸ் வானியலாளர் Fritz Zwicky முதன் முதலாக கரும்பொருளை மும்மொழிந்தார். அவர் அண்டங்கள் அதில் இருக்கும் கண்ணுக்குத் தெரியும் திணிவு அனுமதிப்பதை விட அதிவேகமாக இயக்கத்தில் இருப்பதாகவும் இந்த அசாதாரணமான நிலைக்குக் காரணம் அவற்றில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கரும்பொருள் ஒன்று அவற்றில் இருப்பது தான் என்றும் முடிவுக்கு வந்தார். இந்த கரும்பொருள் அண்டங்கள் சிதையாத விதம் அதிவேகமாக சுழலத் தேவையான மேலதிக ஈர்ப்பு விசையை அவற்றிட்கு வழங்குவதாகவும் கருதப் படுகின்றது. இந்நிலையில் தற்போது Fermi விண் தொலைக் காட்டியின் கண்டுபிடிப்பு இந்த கரும்பொருளைப் பார்ப்பதற்கான ஒரு சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை காலம் கரும்பொருள் அண்டங்களைப் பிணைத்து வைத்துள்ள போதும் மின்காந்த விசையுடன் கரும்பொருள் தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தினாலும் ஒளியை உறிஞ்சவோ அல்லது பிரதிபலிக்கவோ செய்யாத காரணத்தினாலும் அது கண்ணுக்குத் தெரியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் இதன் இருப்பை அறிய தற்போது வேறு விதமான முயற்சிகள் தொடரப் படுகின்றன.

இந்நிலையில் WIMP எனப்படும் பலவீனாமன இணைவு திணிவுத் துணிக்கைகளால் கரும் பொருள் கட்டமைக்கப் பட்டிருக்கலாம் எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த WIMP துணிக்கைகள் புரோட்டனை (Protons) விட நிறை கூடியவையாகவும், சாதாரண பருப்பொருளுடன் மிக மிகப் பலவீனமாகவே தாக்கத்தை ஏற்படுத்துவதாலும் இதனை இனம் காண்பது மிகக் கடினமானதாக உள்ளது. ஆனாலும் பௌதிகவியல் தத்துவப் படி இரு WIMP அணுக்கள் மோதும் போது அவை ஒன்றை இன்னொன்று ரத்து செய்வதால் காமா கதிர்கள் மற்றும் போட்டோன்கள் உட்பட மிகச் சக்தி வாய்ந்த கதிர்களை வெளிப் படுத்துகின்றன.

கரும்பொருள் குவிய வேண்டிய பகுதிகளை, குறிப்பாக பால்வீதியின் மையத்தை ஆய்வு செய்து, இந்த குறிப்பிட்ட காமா கதிர்களைத் தேடுவதில் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளைச் செலவிட்டனர். ஃபெர்மி காமா-கதிர் விண்வெளி தொலைநோக்கியின் புதிய தரவைப் பயன்படுத்தி, டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டோமோனோரி டோட்டானி, கரும்பொருள் துகள் அழிவுடன் தொடர்புடைய கணிக்கப்பட்ட காமா கதிர் சமிக்ஞையை அடையாளம் கண்டுள்ளதாக இப்போது நம்புகிறார்.

துணிக்கைப் பௌதிகவியலின் (Particle Physics) நவீன மாதிரியில் (Standard Model) இல் கரும்பொருள் துணிக்கைகள் இன்னமும் இடம்பெறாத நிலையில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது குறிப்பிடத்தக்கது.