பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச் சூழல் மாசுபாடு : விரைவு நடவடிக்கைக்கு அரசாங்கங்களை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

உலக அளவில் பிளாஸ்டிக் மாசுபாடு அதிகரிக்கும் வேகத்தில் கூடி வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதை இனியும் தாமதிக்கக் கூடாது என உலக அரசாங்கங்களை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். போர்ட்ஸ்மௌத் பல்கலைக் கழகத்தின் உலகளாவிய பிளாஸ்டிக் கொள்கை மையத்தின் இயக்குனரான டாக்டர் அண்டாயா மார்ச், Earth & Environment பத்திரிகையில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகாவிய பிளாஸ்டிக் கழிவு கட்டுப்பாட்டு ஒப்பந்தத்த்தின் அடிப்படையிலான சர்வதேசத்தின் நிலைப்பாடு கடினமாக பூட்டிக் கிடக்கப் பட்டுள்ள நிலையில் இந்த பிரச்சினையைக் கையாளத் தேவையான உபகரணங்களைக் கொண்டுள்ள நாடுகள் உடனே அவற்றை உபயோகிக்கக்த் தொடங்க வேண்டும் என்றுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு இது தொடர்பாக ஐ.நா சபையின் INC-5.2 எனப்படும் அரசுகளுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை முழுமையான ஒப்பந்தம் எதுவும் எட்டப் படாது நிறைவுற்றது. இந்நிலையில் பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்ச்சியாகவே நிலங்கள், ஆறுகள் மற்றும் கடல்கள் ஆகிய இடங்களில் அதிகரித்த வண்ணம் இவற்றில் காணப் படும் உயிரியல் வட்டம் (Ecosystems) இற்கு அச்சுறுத்தலாகவும், உலகப் பொருளாதாரங்களையும், மனிதரின் சுகாதாரத்தையும் பாதித்தவாறும் உள்ளது.

இந்நிலையில் டாக்டர் மார்ச் மேலும் தெரிவிக்கையில் உலகளாவிய பிளாஸ்டிக் கழிவு ஒப்பந்தம் எட்டப் படாதது என்பது இதற்கு எதிராக செயலாற்றாமல் இருப்பதற்கான அர்த்தம் அல்ல. ஒவ்வொரு வருடமும் பிளாஸ்டிக் கழிவு கூடியவாறு உள்ளது. அரசாங்கங்கள் பாரியளவிலான செயற்திட்டங்களை முன்னெடுக்க காத்திராது நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அல்லது ஊக்குவிக்கலாம். சில நாடுகளில் இது சாத்தியமாகி உள்ளது.

உலகளாவிய ஒப்பந்தம் இல்லாவிட்டாலும், விரிவான தேசிய பிளாஸ்டிக் உத்திகள் மூலம் அரசாங்கங்கள் எவ்வாறு உடனடி முன்னேற்றத்தை அடைய முடியும் என டாக்டர் மார்ச் தனது கட்டுரையில் விவரித்துள்ளார். நன்கு வடிவமைக்கப்பட்ட தேசிய திட்டங்கள் அமைச்சகங்களை ஒருங்கிணைக்கவும், பங்குதாரர்களை ஒருங்கிணைக்கவும், நிதியைத் திறக்கவும் மற்றும் எதிர்கால ஒப்பந்த அமலாக்கத்திற்கு நாடுகளை தயார்படுத்தவும் முடியும்.

பிளாஸ்டிக்கை சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் பொது சுகாதாரப் பிரச்சினையாகவும் கருத வேண்டும் என்பதை டாக்டர் மார்ச் வலியுறுத்துகின்றார். பிளாஸ்டிக் மற்றும் அதனுடன் தொடர்புடைய இரசாயனங்கள் புற்றுநோய், சுவாச நோய் மற்றும் நாளமில்லா சுரப்பி சீர்குலைவு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துகின்றன என்பதற்கான வளர்ந்து வரும் சான்றுகளுடன், உலகளாவிய சுகாதாரம் தொடர்பான பொருளாதார செலவுகள் ஆண்டுக்கு US$1.5 டிரில்லியனுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வடிவமைப்பது, விரைவான, அதிக லட்சிய ஒழுங்குமுறைக்கான பொது புரிதலையும் அரசியல் அழுத்தத்தையும் வலுப்படுத்தும் என்று கருதப் படுகின்றது. பேச்சுவார்த்தைகள் மெதுவாக இருந்தாலும், ஒப்பந்த செயல்முறை ஏற்கனவே ஆராய்ச்சி, நிதி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பைத் திரட்டியுள்ளது. இப்போது வேகத்தை இழப்பது ஒரு முக்கியமான தவறு என்று டாக்டர் மார்ச் எச்சரிக்கின்றார்.

“இந்த தருணத்தை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும், இடைநிறுத்தமாக அல்ல,” என்று போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் புரட்சி பிளாஸ்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த இணை ஆசிரியர் சாம் வின்டன் கூறினார். “அரசாங்கங்களும் சமூகங்களும் இப்போது தேசிய திட்டமிடல், லட்சியக் கொள்கைகள் மற்றும் உள்ளூர் நடவடிக்கை மூலம் தலைமைத்துவத்தைக் காட்டலாம் மற்றும் இறுதியாக ஒரு உலகளாவிய ஒப்பந்தம் வரும்போது தயாராக இருக்க முடியும்.”

என்றும் அவர் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் மாசுபாடு மெதுவாக நகரும் பேச்சுவார்த்தைகளுக்கு காத்திருக்க முடியாது என்றும், நெருக்கடியைக் கட்டுப்படுத்த தேசிய, பிராந்திய மற்றும் உள்ளூர் மட்டங்களில் உடனடி நடவடிக்கை அவசியம் என்றும் இறுதியாக உறுதி படத் தெரிவிக்கப் பட்டுள்ளது.