நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 2

Posted by:

|

On:

|

, ,

முந்தைய தொடருக்கான இணைப்பு – நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 1

இரவு வானம் குறித்த மனித அறிவு வளரத் தொடங்க விவசாயம், கடற் பயணம் மற்றும் தத்துவம் போன்ற துறைகளும் சேர்ந்தே முன்னேற்றம் கண்டன. 17 ஆம் நூற்றாண்டில் தொலைக் காட்டியின் கண்டுபிடிப்பு இதற்கு மேலும் வலுச் சேர்த்ததுடன் பல தலைமுறைகளாக மிகச் சிறந்த வரைகலை நிபுணர்கள், இசையமைப்பாளர்கள், மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது.

நவீன யுகத்தில் நகரங்களில் உள்ள ஒளி விளக்குகளின் வெளிச்சம் இரவு வானில் நட்சத்திரங்களைத் தெளிவாக நோக்க மிகப் பெரும் தடையாக உள்ளது. இதனால் விண்வெளி பார்க்கும் ஆர்வலர்கள் (Stargazers) தமக்குத் தோதான மலைப் பாங்கான அல்லது ஒளி விளக்குகள் அற்ற சமவெளி நிலங்களை நாடிச் செல்லவுள்ளது.

நாம் பூமி என அழைக்கப் படும் பாறைகள், கடல்கள்,  மற்றும் வாயு மண்டலத்திலால் ஆன தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வரும் கிரகத்தில் வசிக்கின்றோம். 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் விண்வெளித் தூசு மண்டலத்தில் (Stellar Dust)இருந்து உருவான போதே பூமியும் உருவானது.

சூரியனில் இருந்து 3 ஆவது இடத்தில் பூமி அமைந்துள்ளது.  எமக்கு முன்பே அமைந்துள்ள புதன் மற்றும் வெள்ளிக் கிரகங்கள் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அவற்றின் வெப்பம் உயிர் வாழ்வுக்கு ஆதாரமான தண்ணீரைக் கொண்டிராத அளவுக்கு உடையவையாக உள்ளது.  புதன் கிரகம் உயிர் வாழ்க்கைக்கு தகுதியில்லாத அதி வெப்பமான கிரகமாகும். ஆனால் வெள்ளிக் கிரகத்தின் மேகங்களில் நுண்ணுயிர்கள் வாழ வாய்ப்புள்ளது எனக் கருதப் படுகின்றது.

சூரியனில் இருந்து Habitable zone எனப்படும் மிகத் திருத்தமான தூரத்தில் பூமி அமைந்திருப்பதாலும், அதன் சராசரி வெப்ப நிலை 15 பாகை செல்சியஸ் என்பதனாலும் இங்கு கடல்கள் அமைந்துள்ளன. உயிர்ப் பல்வகைமையும் காணப்படுகின்றது. பூமியின் வளிமண்டலம் அதன் மேற்பரப்பு வெப்பநிலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும் உயிர் வாழ்க்கைக்கு மிகச் சாதகமாக அமைந்துள்ளது.

சூரியனை ஒருமுறை சுற்றி வர பூமிக்கு 365.25 நாட்கள் எடுக்கின்றது. இதில் 4 வருடங்களுக்கு ஒரு முறை பெப்ரவரி 29 ஆம் திகதி இந்த 1/4 நாட்கள் சேர்க்கப் பட்டு லீப் வருடமாகக் கணிக்கப் பட்டே  நாம் பாவிக்கும் நவீன கிரகேரியன் கலெண்டர் அமைந்துள்ளது. பூமி சூரியனை சுற்றி வரும் பாதை பெரும்பாலான கிரகங்கள் போன்று நீள்வட்டப் பாதையாகும். இதனால் ஒரு வருடத்தில் பூமி சூரியனுக்கு சற்று அருகிலும், அதே போன்று தொலைவிலும் வந்து செல்கின்றது. விநாடிக்கு 30 கிலோ மீட்டர் அதாவது 30 Km/s வேகத்தில் சூரியனை பூமி சுற்றி வருகின்றது. ஆனால் இது சராசரி வேகமாகும்.

Perihelion எனப்படும் சூரியனுக்கு மிக அருகிலுள்ள நீள்வட்டப் பாதையில் பூமி சற்று வேகமாகவும், Aphelion எனப்படும் சூரியனுக்கு மிகத் தொலைவிலுள்ள நீள்வட்டப் பாதையில் பூமி சற்று மெதுவாகவும் பயணிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது Ecliptic என்றால் என்னவென்று பார்ப்போம். 150 மில்லியன் கிலோமீட்டர் விட்டம் கொண்ட ஒரு குறுவட்டு (Disc) போன்ற எமது பூமியின் கிடை மட்ட ஆர்பிட் (Flat plane orbit) Ecliptic எனப்படுகின்றது. இந்த Ecliptic ஆனது சூரியனைச் சுற்றி வரும் ஏனைய அனைத்து 7 கிரகங்களினதும் ஆர்பிட்டர் கிடை மட்டங்களுடனும் மிகச் சரியாக ஒத்திசைகின்றது. (Alignment)

இதனால் நெப்டியூனுக்கு அப்பால் உள்ள பகுதிகளை நாம் கவனத்தில் கொள்ளா விட்டால் சூரிய குடும்பமே ஒரு கிடை மட்டத்தில் (Flat Plane) அமைந்துள்ள தொகுதி என்று கூற முடியும்.

இரவு வானத்தில் கிரகங்கள் மெதுவாக அசைதை நாம் பார்க்கும் போது இவை Zodiac band எனப்படும் நட்சத்திரத் தொகுதிகளுக்கு (Constellations) ஊடாக ஒரு கோட்டுடன் பயணிப்பதை அவதானிக்கலாம். இது எமது Ecliptic சூரிய குடும்பத்தைத் தாண்டியும் பயணிப்பதைக் காட்டுகின்றது. அதாவது நாம் சூரிய குடும்பத்தின் மட்டத்தைப் (Plane) ஐப் பார்க்கின்றோம்.

Ecliptic இனைத் தமிழில் மொழி பெயர்த்தால் கிரகணத் தளம் என்று வருகின்றது. ஆனால் இது கிரகணத்தின் போது மட்டும் அவதானிக்கக் கூடிய ஒன்றல்ல என்பதும் ஊர்ஜிதமாகின்றது.

அடுத்ததாக Transit மாற்றம் என்றால் என்னவென்று பார்ப்போம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களான புதன் மற்றும் வெள்ளி ஆகியவை அரிதான சந்தர்ப்பங்களில் சூரியனின் மேற்பரப்புக்குக் குறுக்கே வரக்கூடும். Transit எனப்படும் இந்நிகழ்வு விண்ணில் உள்ள பிற நட்சத்திரங்களுக்குக் குறுக்கே அவற்றைச் சுற்றி வரும் கிரகங்கள் வருவதை நோக்கவும் பயன்படுகின்றது. இந்த Transit நிகழ்வு ஏற்படும் போது அதில் பயணிக்கும் கிரகங்கள் குறித்து கற்கவும், அவற்றில் உயிர் வாழ்க்கை உண்டா என்று அறியத் தேவையான மூலகங்கள் உள்ளதா என்று அலசவும் பயன்படுகின்றது.

Transit நிகழ்வதை ஆதாரமாக வைத்து பூமியையும் மனிதனுக்கு இணையான அறிவுடைய வேற்றுக்கிரக வாசிகள் நோக்கி அறிந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த தொடரில் பூமி 23.4 பாகை கோணத்தில் சாய்ந்த நிலையில் (Axial Tilt) சுற்றுவதால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்கள் மற்றும் பூமியின் வானியல் துருவங்கள் குறித்தும் பார்ப்போம்.