Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.


கடந்த தொடரில் Ecliptic மற்றும் Axial Tilt அதன் காரணமாக ஏற்படும் பருவ நிலை வேறுபாடுகள் மற்றும் Sidereal Day, Solar Day குறித்தும் சம இரவு பகல்கள் குறித்தும் பார்த்தோம்.
அதற்கான இணைப்பு :
நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3
பூமத்திய ரேகையுடன், Ecliptic இணையும் புள்ளிகளில் தான் இரு Equinoxes உம் அமைவது குறிப்ப்பிடத்தக்கது. இதுவும் Ecliptic பூமத்திய ரேகைக்கு சமாந்தரமாக அல்லாது 23.4 பாகை கோணம் சாய்வில் அமைந்திருப்பதற்கு ஒரு சான்றாகும். இதனையே நாம் Axial Tilt என்றும் அழைக்கின்றோம்.
அடுத்ததாக அட்சரேகை (Latitude) மற்றும் தீர்க்கரேகை (Longtitude) குறித்துப் பார்ப்போம். வானில் நாம் பார்க்கும் சாதாரண பொருட்களின் நிலை அட்சரேகையைச் சார்ந்தது ஆகும். ஒவ்வொரு சமமான அட்சரேகை வட்டங்களும் பூமியின் வட தென் துருவ அச்சுக்கு சமாந்தரமாகவே அமைந்திருக்கும். பூமியில் நாம் அமைந்துள்ள பகுதியின் அட்சரேகையானது பூமத்திய ரேகையில் இருந்து எத்தனை பாகை கோணத் தொலைவில் அது இருக்கின்றது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப் படுகின்றது.
Equator எனப்படும் பூமத்திய ரேகையில் கோணம் 0 பாகையாகும். இலண்டனின் கிறீன்வீச் நேரக் கோடு 51.5 பாகை வடக்கே உள்ளது. சிட்னி 33.9 பாகை தெற்கே உள்ளது. வட துருவம் +90 பாகை வடக்கேயும், தென் துருவம் -90 பாகை தெற்கேயும் அமைந்துள்ளன. துருவ நட்சத்திரமான போலாரிஸ் கிட்டத்தட்ட வடதுருவத்துக்கு மிகவும் நெருக்கமாக அதன் மேலே அமைந்துள்ளது. எனவே அதன் Altitude அட்ச்ரேகைக்கு சமனாகும். இலண்டனில் இருந்து பார்க்கும் போது 51.5 பாகை கோணத்தில் மாலை வானின் மூலையில் துருவ நட்சத்திரம் தென்படும். இதுவே வடதுருவம் என்றால் உச்சி வானில் செங்குத்தாக 90 பாகையில் தென்படும்.
வடதுருவத்தின் ஆர்க்டிக் வட்டம் (Arctic Circle) பூமத்திய ரேகையில் இருந்து 66.5 பாகை வடக்கே அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜூன் மாதம் கோடை காலத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்பதுடன் டிசம்பர் மாதம் குளிர் காலத்தில் சூரியன் உதிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தென் துருவத்தின் அண்டார்ட்டிக் வட்டம் (Antarctic Circle) நேர் எதிர் நிலையில் உள்ளது. பூமத்திய ரேகையில் இருந்து
– 66.5 பாகை தெற்கே அமைந்துள்ள இப்பகுதியில் ஜூன் மாதம் குளிர்காலத்தில் சூரியன் உதிப்பதில்லை என்பதுடன் டிசம்பர் மாதம் கோடைக் காலத்தில் சூரியன் அஸ்தமிப்பதிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தீர்க்க ரேகைகள் (Longtitudes) அட்ச ரேகைகளுக்கு சமாந்தரமாகக் காணப்படும். பூமியைச் சுற்றிலும் சரியாக 360 பாகைகளாக தீர்க்க ரேகைகள் பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 1 பாகை வித்தியாசத்தில் பிரிக்கப் பட்டுள்ள இந்த அனைத்து ரேகைகளும் வட தென் துருவத்தின் உச்சிகளில் இணைகின்றன. Prime Meridian என அழைக்கப் படும் 0 பாகை தீர்க்க ரேகைக் கோடு இலண்டனில் உள்ள கிறீன்வீச் இனூடாக செல்கின்றது. எனவே இங்கு நேரத்தை அளவிடும் மிக முக்கியமான றோயல் கண்காணிப்பகம் (Royal Observatory) அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப் புறத்தில் சர்வதேச திகதிக் கோடு பசுபிக் பெருங்கடலின் ஊடாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த சர்வதேசத் திகதிக் கோட்டின் ஒரு புறம் ஒரு நாளாகவும், இன்னொரு புறம் இன்னொரு நாளாகவும் கற்பனையாக வகுக்கப் பட்டுள்ளது.
தீர்க்க ரேகையானது கிறீன்வீச் கோட்டில் இருந்து எவ்வளவு தொலைவில் நமது இடம் அமைந்துள்ளது என்பதை எடுத்துரைக்கின்றது. உதாரணத்துக்கு கோப்பன்ஹேகன் 12.6 பாகை கிழக்கேயும், நியூயோர்க் ஆனது 74 பாகை மேற்கேயும் அமைந்துள்ளன. பூமி மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழல்வதால் கிறீன்வீச்சுக்கு கிழக்கே உள்ள நாடுகள் நேரத்தில் முன்னிலையிலும், மேற்கே உள்ள நாடுகள் நேரத்தில் பின் தங்கியும் இருப்பது புலப்படும்.
கிறீன்வீச்சை (GMT – Greenwich Mean Time) அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணிப்பதால் உலக நாடுகள் தங்கள் வசதிக்கேற்ப கோடைக் காலத்திலும் குளிர்காலத்திலும் நேர மாற்றங்களை மேற்கொண்டு விமானப் பயணங்களையும் இலகுவாக்க இயலுகின்றது. 1884 ஆமாண்டு சர்வதேச அடிப்படையில் பிரிட்டன் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த நாடுகள் அதிகமாக இருந்த காரணத்தினால் GMT நேரக் கோடு இலண்டனின் கிறீன்வீச்சினூடாக வகுக்கப் பட்டது.
இதன் அடிப்படையில் கோப்பன்ஹேகன் GMT இலிருந்து 1 மணித்தியாலம் முன்னதாகவும், நியூயோர்க் GMT இலிருந்து 5 மணித்தியாலம் பின் தங்கியும் காணப் படுவது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாக பூமியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய விண்பூகோளத்தின் (Celestial Sphere) விவரப் படம் குறித்துப் பார்ப்ப்போம். பூமியின் இரு புள்ளிகளுகளுக்கான தூரம் மற்றும் சந்திரன் உட்பட வேறு கிரகங்களுக்கான தூரத்துடன் ஒப்பிடுகையில் பூமியில் இருந்து நட்சத்திரங்களுக்கான தூரம் மிக அதிகமாகும். பூமிக்கு மிக அருகே உள்ள ப்ராக்ஸிமா செண்டூரி நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால் கூட அதுவே பூமியில் இருந்து நெப்டியூன் கிரகம் இருக்கும் தூரத்தை விட 9000 மடங்கு அதிக தொலைவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் பூமியை மையமாகக் கொண்டு சூரியனையும் உள்ளடக்கிய விண்பூகோளம் மற்றும் சூரியனுக்கு அப்பால் பூமியின் Ecliptic உடன் அமையக் கூடிய நட்சத்திரத் தொகுதிகளுடன் (Constellation) சேர்ந்த பூமியை மையமாகக் கொண்ட விண்பூகோளம் என இரு வகைகளில் கீழிருக்கும் படங்கள் விளக்குகின்றன.
கீழே உள்ள படத்தில் Ecliptic தான் பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையுமாகும். ஆனால் புவி மைய படம் என்பதால் இதில் சூரியன் பூமியை சுற்றி வருவது போல் காண்பிக்கப் பட்டுள்ளது. இந்த Ecliptic உடன் வட தென் துருவங்களுக்கு நேராக பூமியின் பூமத்திய ரேகை (Celestial equator) இணையும் புள்ளிகளில் சம இரவு பகல்கள் பூமி முழுவதும் ஏற்படுகின்றன. வட துருவத்தில் இணையும் போது அது Autumnal Equinox (இலையுதிர் கால சம இரவு பகல்) மற்றும் தென் துருவத்தில் இணையும் பொது Vernal Equinex (வசந்த கால சம இரவு பகல்) என்றும் அழைக்கப் படுகின்றது.

கீழே உள்ள படத்தில் சூரியனை பூமி சுற்றி வரும் பாதையில் ஒவ்வொரு 4 பருவங்களுக்கும் அது எந்த நட்சத்திரத் தொகுதிகளுக்கு (Constelllation) இணையாகப் பயணிக்கின்றன என்பதைக் காட்டுகின்றது.

அடுத்த தொடரில் விண்பூகோளங்கள் குறித்து மேலும் பார்ப்போம்.
தகவல் : Nucleus A Trip To Heart of The Matter