நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 5

Posted by:

|

On:

|

, ,

கடந்த தொடரில் பூமத்திய ரேகை, அட்சரேகை, தீர்க்க ரேகை போன்றவை குறித்தும் கிறீன்வீச் தீர்க்க ரேகை அடிப்படையாக வைத்து பூமியில் ஒவ்வொரு நாடுகளினதும் நேரங்கள் கணிக்கப் படுவது எவ்வாறு என்றும், இலையுதிர் கால மற்றும் வசந்த கால சம இரவு பகல்கள் குறித்தும் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி, 

நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 4

இத்தொடரில் விண்பூகோளங்கள் குறித்து மேலும் பார்ப்போம்.

பூமி தனது அச்சில் சுழல்வதால் புறத்தே காணப் படும் விண்பூகோளம் எதிர்த்திசையில் நகர்வது போல் தென்படுகின்றது. மேலும் பூமியின் அச்சு பூமியின் துருவங்களுக்கு நேராக செல்வது மாத்திரமன்றி விண்பூகோளத்தின் (Celestial Sphere) துருவத்தினையும் நேர் கோட்டில் இணைக்கின்றது. எனவே நாம் பூமத்திய ரேகையில் (Equator) இலிருந்தால் தத்துவார்த்த அடிப்படையில் நாம் இரு துருவங்களையுமே ஒரே நேரத்தில் பார்க்க முடியும். ஆனால் நடைமுறையில் எம்மில் பலர் இரு துருவங்களில் ஒன்றையே காண்கிறோம். பூமத்திய ரேகைக்கு வடக்கே வானியலாளர்கள் விண்பூகோளாமானது துருவ நட்சத்திரமான போலாரிஸ் இற்கு மிக நெருக்கமாகத் தென்படுவதைப் பார்க்கலாம்.

ஆல்பா உர்சாவே மினோரிஸ் உடுத் தொகுதியின் உர்சா மைனர் என்ற துருவக் கஎரடி விண்மீன் தொகுதியின் வால் பகுதியில் இந்த போலாரிஸ் நட்சத்திரம் அமைந்திருக்கும். பூமியில் இருந்து பார்க்கும் போது வானமானது தெற்கு விண்பூகோளத்தினை கடிகாரத் திசையிலும், வடக்கு விண்பூகோளத்தினை கடிகாரத்துக்கு எதிர்த் திசையிலும் சுற்றுவதைக் காணலாம். பருவநிலை வான் அட்டவணைகளில் இவற்றின் வெவ்வேறு நிலைப்பாடுகள் குறித்த தகவலைப் பெறலாம்.

வானில் போலாரிஸ் நட்சத்திரத்தைக் காண்பது எளிதான ஒன்றே ஆகும். பிக் டிப்பர் (The Plough) எனப்படும் விண்மீன் தொகுதியில் மையத்தில் டுபே மற்றும் மெராக் ஆகிய நட்சத்திரங்களை இணைக்கும் கோட்டினை அப்படியே நீட்டித்தால் அது உர்சா மைனர் விண்மீன் தொகுதியின் வாலில் இறுதியாக இருக்கும் பிரகாசமான நட்சத்திரமான போலாரிஸ் இனை இணைக்கும் என்பது குறிப்பிடத்த்கக்கது. Plough விண்மீன் தொகுதி பூமியின் சுழற்சியால் துருவத்தைச் சுற்றி வரும் போதும் எப்போதும் இந்தக் கோட்டினை நினைவு வைத்துக் கொள்வதன் மூலம் எப்போதும் போலாரிஸ் இனை இனம் காணலாம் என்பதும் முக்கியமானதாகும்.

இதேபோன்று தெற்கு விண்பூகோளத்தை எடுத்துக் கொண்டால் சிக்மா ஒக்டாண்டிஸ் என்ற நட்சத்திரமே துருவத்துக்கு மிக அண்மித்ததாகும். ஆனால் இதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது. வடக்கு விண்பூகோளத்தைப் போன்றே தெற்கிலும் தெற்குவிண்துருவத்தை அடையாளம் காண பிரபலமான முறை ஒன்றுள்ளது.

ஆல்பா செண்டூரி தொகுதியில் உள்ள ரிகெல் கெண்டாரௌஸ் மற்றும் பீட்டா செண்டூரியில் உள்ள ஹடார் ஆகிய மிகப் பிரகாசமான நட்சத்திரங்களை இணைத்து அக்கோடுகளை நீட்டித்து எதிர்ப்புறம் தென்சுலுவை (Crux) நட்சத்திரத் தொகுதியின் Gacrux மற்றும் Acrux ஆகியவற்றை இணைத்து நீட்டிக்கும் கோடு அதனுடன் இணையும் புள்ளிக்கு மிக அருகில் சிக்மா ஒக்டாண்டிஸ் அல்லது தெற்கு விண்துருவத்தின் இருப்பை இனம் காணலாம். இதனை அறிந்து கொண்டால் ஓர் தொலைக் காட்டி மூலம் குறித்த நட்சத்திரத்தைப் பார்க்கவும் முடியும்.

அடுத்தாக விண்பூகோள ஒருங்கிணைப்பு (Coordinates) மற்றும் வலது ஏற்றம் (Right Ascension) இறக்கம் (Declination) குறித்த விபரத்தைப் பார்ப்போம்.

பூமியின் மேற்பரப்பில் உள்ள எந்தவொரு இடத்தின் இருப்பையும் நாம் தீர்க்க ரேகை (Longtitude) மற்றும் அட்சரேகை (Latitude) ஆகிய இரு ஒருங்கிணைப்புக்களை மாத்திரமே கொண்டு தீர்மானிக்கலாம். இதே ஒருங்கிணைப்புக்களைக் கொண்டு விண்பூகோளத்தின் எந்தவொரு நட்சத்திரம் அல்லது பொருளின் திருத்தமான இருப்பை அறியவும் முடியும்.

அடுத்த தொடரில் இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பார்ப்போம்..