Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.


விண்பூகோள ஒருங்கிணைப்பு வலது ஏற்ற இறக்கங்கள் குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் விண்பூகோளத்தின் எந்தவொரு நட்சத்திரம் அல்லது வேறு பொருளின் திருத்தமான இருப்பை அறிவது எவ்வாறு என்பது போன்ற தகவல்களைப் பார்க்கும் முன்னர் வானியலின் சில அடிப்படைத் தகவல்களை எளிய தமிழில் காண்போம்..
வானில் கண்ணால் பார்க்கக் கூடிய அனைத்துப் பொருட்களினதும் இயக்கம் குறித்த விஞ்ஞானமே வானியலாகும். நவீன மனிதன் இந்தப் பார்வையை மிகவும் கூர்மையானதாக மாற்றி வருகின்றான். அதாவது வானியல் ஆய்வைத் தமது தொழிலாகக் கொண்டுள்ள விஞ்ஞானிகள் இன்றைய யுகத்தில் இந்த அவதானங்களை மேற்கொள்ள பூமியைச் சுற்றி வரக் கூடிய விதத்தில் நிறுத்தப் பட்டுள்ள பல செய்மதிகள் மற்றும் சூரிய குடும்பத்தில் பயணித்து வரும் செயற்கைக் கோள்கள் மூலமாகவும், மிகவும் திருத்தமான புற ஊதாக் கதிர் மற்றும் அகச்சிவப்புக் கதிர் போன்ற ஒளி அலைகளின் ஊடாகவும் ஆய்ந்து வருகின்றனர்.
உதாரணமாக சமீப காலத்தில் விண்ணுக்குச் செலுத்தப் பட்டு L2 எனப்படும் மிக முக்கியமான ஆர்பிட்டரில் சூரியனுக்கு எதிர்த்திசையில் இருந்து ஆய்வு செய்யும் விதத்தில் விண்ணில் நிலை நிறுத்தப் பட்டுள்ள அகச் சிவப்புக் கதிர் மூலம் ஆய்வு செய்யும் விண் தொலைக் காட்டியான ஜேம்ஸ் வெப் தொலைக் காட்டியைக் (JWST) கூறலாம்.
BigDipper அல்லது பெரும் கலப்பை எனப்படும் நட்சத்திரத் தொகுதி உர்சா மேஜர் Ursa Major எனப்படும் Asterism தொகுதிக்குள் அடங்கும் நட்சத்திரத் தொகுதியாக ஆக இனம் காணலாம். அதாவது அடையாளம் காணப் பட்ட 88 விண்மீன் தொகுதியில் அடங்காத நட்சத்திரத் தொகுதிகள் அல்லது தனிப்பட்ட நட்சத்திரத் தொகுதியுடன் புறத்தே இருந்து நட்சத்திரங்களை இணைத்து உருவாகும் புதிய தொகுதிகள் Asterism என அழைக்கப் படுகின்றன. உதாரணத்துக்கு மிகப் பெரிய Asterism ஆன பெரும் சதுரம் என அழைக்கப் படும் பெகாசுஸ் Pegasus இன் 4 மூலைகளில் ஒன்று அதாவது Alpheratz என்ற விண்மீன் அன்ட்ரோமிடா அண்டத்தைச் (Andromeda galaxy) சேர்ந்தது ஆகும்.
இன்று நம் உலகில் சுமார் 30 000 தொழில்முறை வானியலாளர்கள் செயலாற்றி வருகின்றார்கள். இதுதவிர இலட்சக் கணக்கான வானியலாளர்கள் வானை அவதானிப்பதை ஒரு பொழுது போக்காகவே கொண்டுள்ளனர். இவர்களுக்கு வானில் தெரியும் நட்சத்திரத் தொகுதிகளை இனம் காண்பது பழக்கமான ஒன்றாகவே இருக்கின்றது. இதற்கு பைனோகுலர் முதற் கொண்டு தூரத்தே தெரியும் அண்டங்கள் (Galaxies) வரை மிகத் துல்லியமாக அவதானிக்கக் கூடிய அதிநவீன தொலைக் காட்டி வரை இன்று பாவனைக்கு உள்ளது. விண்ணில் பயணிக்கும் விண்கற்கள், வால்வெள்ளிகள், மற்றும் தமது ஆயுள் காலத்தின் இறுதியில் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், பிரகாசமான நட்சத்திரங்களைக் குறுக்கிடும் விண்கற்களை அவற்றின் நிழலைக் கொண்டு அவதானிப்பதன் மூலம் அவற்றின் கட்டமைப்பை வரைபடமாக்க வானியலாளர்களுக்கு உதவுதல் போன்ற அவதானங்கள் மூலம் மிகப் பெரும் வானியல் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பவர்களுக்கே தனிப்பட்ட விருப்பம் உள்ளவர்கள் உதவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நவீன உபகரணங்கள் மற்றும் திசைக் காட்டிகளின் கண்டு பிடிப்புகளுக்கு முன்பே மனித நாகரிகம் வானியலில் தேர்ச்சி பெற்றிருந்தது. இதில் முக்கியமாக வேத காலத்தில் பண்டைய இந்தியர்கள் கொண்டிருந்த அறிவு அபாரமானது ஆகும். இதைப் பற்றிய பார்வையை அடுத்த தொடரில் பார்ப்போம்.
பசுபிக் சமுத்திரத்தின் பொலைனேசியா தீவுகளைச் சேர்ந்த கடலோட்டிகள் எந்த ஒரு தரை அடையாளம் அல்லது திசைக் காட்டியின் துணையில்லாது வெற்றிகரமாக நூற்றுக் கணக்கான மைல்கள் பாய்மரப் படகில் பயணித்துள்ளனர். நட்சத்திரங்கள், சூரியன் போன்றவற்றின் அமைவிடம் மற்றும் இயக்கம் பற்றிய அவர்களின் அறிவு, காற்றின் திசை, கடல் அலைகளின் தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே இதை அவர்கள் சாத்தியமாக்கியுள்ளனர்.
பண்டைய வானியலுக்கு உரமூட்டிய அடிப்படை ஆய்வுகள் பின்வருமாறு அமைந்திருந்தன…
கிரேக்கத்தில் இருந்து பெறப்பட்ட Planet என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Wanderer என அர்த்தமாகும். கிரேக்கர்களும் இன்னும் சில நாகரீகத்தைச் சேர்ந்த மனிதர்களும், வானில் சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியும் 5 கிரகங்களை அடையாளம் கண்டனர். வெறும் கண்ணுக்கு வானில் பிற நட்சத்திரங்களைப் போன்றே கிரகங்கள் தெரிந்தாலும், பூமியின் சுழற்சியுடன் ஒத்துப் போகும் பிற நட்சத்திரங்கள் அல்லது நட்சத்திரத் தொகுதிகளின் இயக்கத்துடன் ஒத்துப் போகாது தனித்து தமது பாதையில் இவை இயங்கியது கிரேக்கர்களை மர்மத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த நட்சத்திரம் போன்று தென்பட்ட கிரகங்கள் பிற நட்சத்திரங்கள் போன்று மின்னவில்லை என்பதும் குழப்பத்தைத் தந்தது. இந்த 5 கிரகங்களுக்கும் ஒவ்வொரு கலாச்சாரமும் தமது தனிப்பட்ட பெயரைச் சூட்டினர். ஆங்கிலத்தில் Mercury, Venus, Mars, Jupiter, Saturn என பெயரிடப் பட்டது.
வானில் இவற்றின் தனித்துவமான இயக்கத்துக்கு பூமியைப் போலவே இவையும் சூரியனைத் தமது தனிப்பட்ட ஒழுக்கில் சுற்றி வருவதும், பிற நட்சத்திரங்களை விட பூமிக்கு மிக அருகில் இவை இருப்பது அவற்றின் பிரகாசத்துக்குக் காரணமாகவும் அமைந்துள்ளது என்பது பின்னாளில் அறியப் பட்டது. மேலும் இக்கிரகங்கள் பூமியை விடச் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருந்தாலும் அனைத்துமே சூரியனை விட மிக மிகச் சிறியவையாக இருப்பதும் அறியப் பட்டது. இது தவிர சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களது ஒழுக்குமே (பூமி உட்பட) இணையாக ஒரே தளத்தில் அமைந்திருப்பதால் அவை எமது பூமியின் வானில் வரிசையாகத் தென்படவும் காரணமாக உளது.
அடுத்த தொடரில் பண்டைய இந்தியாவின் வேதகாலத்தில் வானியல் அறிவு எவ்வாறு விருத்தியடைந்து இருந்தது என்பது குறித்த தகவல்களுடன் பூமியில் உள்ள நாம் வானை அவதானித்து பிரதானமாக வகைப் படுத்தி வைத்திருக்கும் 88 நட்சத்திரத் தொகுதிகள் குறித்த அறிமுகம் மற்றும் அவற்றின் அட்டவணை குறித்தும் பார்ப்போம்.