2023 KQ14

சூரிய குடும்பத்திற்கு அப்பால் தோற்றத்தை ஆராயும் சுபாரு

2023 KQ14

ஹவாய் தீவில் அமைந்துள்ள ஜப்பானின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தின் தொலைக் காட்டியான சுபாரு அண்மையில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

அதாவது சூரிய குடும்பத்துக்கு வெளியே இருக்கும் கூறுகளின் தோற்றம், பரிணாமம் மற்றும் தற்போதைய கட்டமைப்பு என்பவற்றை ஆய்வு செய்ய தகுந்த ஒரு விண்பொருளை புளூட்டோ கிரகத்துக்கு அப்பால் கண்டுபிடித்துள்ளது. FOSSIL எனப்படும் சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள விண் கூறுகளைக் கற்கும் ஆய்வொன்றின் பகுதியாகவே இந்த விண்பொருள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த பொருள் 2023 ஆமாண்டு மார்ச், மே மற்றும் ஆகஸ்ட்டு மாதங்களில் இனம் காணப் பட்டிருந்தது. இது தொடர்பான தகவல்கள் Nature astronomy எனும் பத்திரிகையில் ஏற்கனவே வெளிவந்திருந்தன.

2023 KQ14 எனப் பெயரிடப் பட்ட இந்தப் பொருளை ஜூலை 2024 இல் கனடா, பிரான்ஸ் மற்றும் ஹவாய் ஆகியவை இணைந்து ஆய்வு செய்தன. மேலும் தொடர்ந்து 19 வருடங்களுக்கு இந்த விண்பொருள் பயணிக்கும் ஒழுக்கைக் கண்காணிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதுவரை இதோ போன்று 4 விண்பொருட்களே அரிதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. 4 ஆவது விண்பொருளான இதற்கு Sednoid என ஏனைய விண்பொருட்களைப் போன்றே மரபு ரீதியாகப் பெயரிடப் பட்டுள்ளது.

சூரிய குடும்பத்துக்கு அப்பால் PC Cluster என்றழைக்கப் படும் பகுதியை Fossil குழுவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்ததில்  2023 KQ14 தொடர்ந்து 4.5 பில்லியன் வருடங்களாக தனது ஒழுக்கில் பிசகாது பயணித்துக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

2023 KQ14 இன் ஒழுக்கைப் (Orbital) போன்றே ஏனையவற்றின் ஒழுக்கு இல்லா விட்டாலும் இவற்றின் ஒழுக்கும் 4.2 பில்லியன் வருடங்களாக பிசகாது இருந்து வருகின்றது. இந்த ஒழுக்குகளின் தன்மையானது சூரிய குடும்பம் நாம் நினைத்ததை விட சிக்கலான கட்டமைப்பைக் கொண்டிருப்பதையும், தனித்துவமான பல்வகைமையை உடையது என்பதையும் காட்டுகின்றது.

மேலும் இது சூரிய குடும்பத்தில் 9 ஆவதாக ஒரு கிரகம் உள்ளது என்ற சமீபத்திய ஊகங்களுக்கும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. உண்மையில் 9 ஆவதாக ஒரு கிரகம் இருந்தால் அது நாம் எதிர்பார்ப்பதை விட அதிக தொலைவில் தனது ஒழுக்கை உடையதாக இருக்கும் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

வழமைக்கு மாறான இந்த விண்பொருட்களின் ஒழுக்குகள் மூலம் சூரிய குடும்பத்தில் முன்பு 9 ஆவதாக ஒரு கிரகம் இருந்திருக்கலாம் என்றும் அது தற்போது நெப்டியூனைத் தாண்டி மிகத் தொலைவில் சூரிய குடும்பத்தை விட்டே வெளியேறிச் சென்று கொண்டிருக்கலாம் என்பதையும் அறிய முடிகிறது என்கின்றனர் வானியலாளர்கள்.

நெப்டியூனின் ஈர்ப்பு விசை மிகக் குறைந்த செல்வாக்கையே செலுத்தும் பகுதியில் இந்த 2023 KQ14 பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விண்பொருட்கள் பயணிக்கும் ஒழுக்கு நீண்டதாக இருப்பதனாலும், பெரியதோரு Perihelion (சூரியனுக்கு அண்மித்த பகுதி )நிலவும் பகுதியூடாக சென்றதாலும் 20223 KQ14 தோன்றிய புதிதில் மிக அசாதாரமான விண்வெளி நிகழ்வு ஒன்று நிலவியிருக்கலாம் என ஊகிக்கப் படுகின்றது.

இந்த தனித்துவமான, தொலைதூர பொருட்களின் சுற்றுப்பாதை பரிணாமம் மற்றும் இயற்பியல் பண்புகளைப் புரிந்துகொள்வது சூரிய மண்டலத்தின் முழு வரலாற்றையும் புரிந்துகொள்வதற்கு மிக முக்கியமானது. தற்போது, சுபாரு தொலைநோக்கி பூமியில் இதுபோன்ற கண்டுபிடிப்புகளைச் செய்யக்கூடிய சில தொலைநோக்கிகளில் ஒன்றாகும்.

“FOSSIL குழு இது போன்ற பல கண்டுபிடிப்புகளைச் செய்து சூரிய மண்டலத்தின் வரலாற்றின் முழுமையான படத்தை வரைய இயன்றால் அது வானவியல் துறைக்கு மிக முக்கிய மைல் கல்லாகும்.