3I/ATLAS

3I/ATLAS குறுங்கோளின் அசாத்திய தன்மை! : ஐன்ஸ்டீன் கொள்கைக்கு மற்றுமொரு சான்று

சற்று பெரிய விண்கல் அல்லது பெரியதொரு குறுங்கோள் (Comet) எனவும் அழைக்கப் படக்கூடிய 3I/ATLAS என்ற வால்வெள்ளி சமீபத்தில் சூரியனை அண்மித்தது. இவ்வருடம் கோடைக் காலத்தில் முதன் முதலில் அவதானிக்கப் பட்ட குறித்த இந்த குறுங்கோள் சமீபத்தில் சூரியனை அண்மித்த போது அதன் வேகம் அதிகரித்ததுடன் (ஆர்முடுகல் – Acceleration) அதன் நிறமும் நீல நிறத்தில் மாறியிருந்தது அவதானிக்கப் பட்டுள்ளது.

3I/ATLAS இன் வேக அதிகரிப்புக்கு ஈர்ப்பு சக்தி காரணம் இல்லை என அறியப் பட்டது ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கைக்கு அதாவது காலவெளி சம்பந்தப் பட்ட கணித சூத்திரங்களுக்கு இன்னுமொரு வலுவான சான்றை அளித்துள்ளது. 3I/ATLAS இன் இந்த அசாத்திய நடத்தைக்கு ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் வான் பௌதிகவியலாளர் அவீ லோயெப் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் நாசாவால் அவதானிக்கப் பட்ட போது குறித்த வால்வெள்ளியில் இருந்து அதன் வால் பகுதியூடாக வாயு மிக வேகமாக வெளியேறி வருவதே அதன் வேக அதிகரிப்புக்குக் காரணம் என்றுள்ளார்.

Fox செய்தி ஊடகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இனி வரும் மாதங்களில் குறித்த வால்வெள்ளியின் திணிவு 1/2 மடங்காகக் குறையும் என்றும் இதன் விளைவால் ஏற்படும் துகள்களால் (debris) 3I/ATLAS இன் வால்பகுதி இன்னமும் நீளும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இருந்த போதும் சூரியனுக்குப் பின்னால் ஆர்பிட்டரில் வலம் வந்து கொண்டிருப்பதால் 3I/ATLAS வால்வெள்ளியை பூமியில் இருந்து தொலைக் காட்டிகளால் கூட இப்போதைக்கு அவதானிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இது மீண்டும் சூரியனுக்கும் பூமிக்குமம் இடையே ஒரு ஆர்பிட்டரில் வரத் தொடங்கும் என்றும் அதன் போது பூமியில் இருந்து நேரடியாக அவதானிக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது. அதுவரை NASA மற்றும் ESA போன்ற விண்வெளி ஆய்வு மையங்கள் குறித்த வால்வெள்ளியை விண்ணில் வலம் வந்து கொண்டிருக்கும் தமது தொலைக் காட்டிகள் மூலம் தொடர்ந்து அவதானிக்கத் திட்டமிட்டுள்ளன.

இதேவேளை3I/ATLAS குறுங்கோளானது திரும்பத் தெரியும் போது எடை இழப்பைக் காட்டாவிட்டால் ஈர்ப்பு ஆர்முடுகல் சம்பந்தமில்லாத குறித்த தன்மை அதன் மத்தியில் உள்ள ஒரு விண்கலப் பொறிமுறையின் தொழிநுட்ப விளைவாக இருக்க வேண்டும். அதாவது 3I/ATLAS ஆனது ஒரு ஏலியன் விண்கலமாக இருக்க வேண்டும். ஆனால் இதற்கான வலுவான வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாசாவின் X தளத்தில் வெளியாகி உள்ள விளக்கத்தில் 3I/ATLAS ஆனது இதுவரை சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து அதனுள்ளே நுழைந்த 3 ஆவது வால்வெள்ளி ஆகும் என்றும், ஆனால் இதனால் ஏலியன்களது இருப்போ அல்லது பூமியின் உயிர் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலோ எதுவும் இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைகளை நிரூபிக்க சூரியனை மிக அண்மிக்கும் போது எதிர்பார்த்ததை விட 4 ஆர்க் செக்கன்கள் வளைவு அதிகமாக இருந்ததும் குறத்த 3I/ATLAS ஒரு செயற்கைப் பொருளாக இருக்க முடியும் என ஐயப்பட ஏதுவாகியுள்ளது.

இதுதவிர குறித்த 3I/ATLAS  வால்வெள்ளி நீல நிறத்தில் பிரகாசிப்பதும் அசாத்தியமான ஒரு தன்மையே என்றும் இதற்குக் காரணமாக அதில் நிகழும் மிக வலிமையான ஆவியாதல் செயற்பாடே என்றும் லோயெப் கூறுகின்றார். மேலும் இந்த நீல நிறம் செயற்கை நிறமாகவும் ஒரு சூடான எஞ்சினில் இருந்து வரக்கூடியது போன்றது என்ற போதும் இதற்கு விஞ்ஞான ரீதியாக இயற்கையான ஒரு பதார்த்தத்தில் இருந்து வெளியாகும் அயனாக்கப் பட்ட கார்பன் மொனோக்ஸைடு (Ionized carbon monoxide) சான்றாக இருக்கலாம் எனவும் லோயெப் மேலும் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 30 அன்று 3I/ATLAS சூரியனுக்கு மிக அருகில் சென்றது, மேலும் தமது ஜூஸ் விண்கலம் நவம்பர் 2 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் அதை மீண்டும் கண்காணிக்கும் என்று ESA கூறியுள்ளது. இந்த வால் நட்சத்திரம் டிசம்பர் 19 அன்று பூமிக்கு மிக அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது விஞ்ஞானிகளுக்கு இது ஒரு இயற்கை வால் நட்சத்திரமா அல்லது செயற்கை பொருளா என்பதை உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு வானியலாளர்கள் மத்தியில் நிலவுகின்றது.